நமது முத்தான 10 செயல்பாடுகள்

1. படித்த, சட்டப்படி வயது வந்த, அதே நேரத்தில் ஒருவரை ஒருவர் ”சார்ந்து” வாழாமல் ”சேர்ந்து” வாழ விரும்பும்  இணையர்க்கு அவர்களின் வேண்டுகோளுக்கேற்ப சீர்திருத்த முறைப்படி மணம் முடித்து வைத்தல். (கட்டணம் கிடையாது)
2. மணம் முடித்த அன்றே ஒரு வழக்கறிஞர் மூலம் (வழக்கறிஞருக்கு ஆலோசனை கட்டணம் செலுத்த வேண்டும்) தமிழ்நாடு அரசு கட்டாய திருமணப் பதிவுச் சட்டப்படி பதிவு செய்து சான்றிதழ் பெற்றுத் தருதல்.
3. மணம் முடித்த அன்றே ஒரு வழக்கறிஞர் மூலம் (வழக்கறிஞருக்கு ஆலோசனை கட்டணம் செலுத்த வேண்டும்) சாதி வெறியர்களிடமிருந்து இணையர்க்கு காவல் துறையின் பாதுகாப்பை பெற்றுத் தருதல்.
4. இணையர்க்கு குறைந்தது உரூ.10,000/- மாத வருமானம் கிடைக்கும் வகையில் ஏதேனும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருதல். (கட்டணம் கிடையாது)
5. வேலை கிடைக்கும் வரை இணையரின் உணவு, உடை மற்றும் உறைவிடத்திற்கு ஏற்பாடு செய்து தருதல். (கட்டணம் கிடையாது)
6. இணையர் இடையே தற்காலிக கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதற்கு ஆலோசனைகள் வழங்கியும், ஆற்றுப்படுத்தியும் அவர்களிடையே பகுத்தறிவு மற்றும் மனித நேய வழி வாழ்க்கை புரிதலை ஏற்படுத்துதல். (கட்டணம் கிடையாது) மேலும் இணையர் இடையே நிரந்தர கருத்து வேறுபாடு ஏற்பட்டு இணைந்து வாழ முடியாத சூழல் ஏற்பட்டு விட்டால் சட்டப்படி 6 மாதங்களில் பரஸ்பர மணமுறிவு பெற ஒரு வழக்கறிஞர் மூலம் (வழக்கறிஞருக்கு கட்டணம் செலுத்த வேண்டும்) ஏற்பாடு செய்து தருதல்.
7. இணையர்க்கு அரசின் அனைத்து சலுகைகளையும் பெற வழிகாட்டுதல். (கட்டணம் கிடையாது)
8. ஒவ்வொரு ஆண்டும் தமிழர் காதலர் நாளாம் தை 2 (ஜனவரி 15)ஆம் தேதிக்கும் உலக காதலர் நாளாம் மாசி 2 (பிப்ரவரி 14) ஆம் தேதிக்கும் இடையே ஒரு ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு முழுவதும் உள்ள கலப்பு மணம் புரிந்த இணையர்களை தமிழ்நாட்டின் மையத்திலுள்ள திருச்சிராப்பள்ளியில் திரட்டி மாநாடு நடத்துதல்.
9. தமிழ்நாடு அரசிடம் கலப்பு மணம் புரிந்த இணையரில் ஒருவருக்கு அரசு உடனடியாக வேலை வழங்கவும், இணையரின் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு / உள் இட ஒதுக்கீடு வழக்கக் கோரி போராடுதல்.
10. கலப்பு மணம் செய்த & செய்யவுள்ள இணையர்க்கும், அதை செய்து வைப்போருக்கும் ஊறுவிளைவிக்கும் சாதி மத வெறியர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தை விட கடுமையான ”ஆணவக் கொலைத் தடுப்புச் சட்டம்” இயற்றக் கோரி போராடுதல்.  அதுவரை தற்போதுள்ள சட்டத்தின் உதவியோடு இணையர்க்கும், அதை செய்து வைத்தோருக்கும் ஒரு வழக்கறிஞர் மூலம் (வழக்கறிஞருக்கு ஆலோசனைக் கட்டணம் செலுத்த வேண்டும்) காவல்துறையை பாதுகாப்பளிக்க ஏற்பாடு செய்தல்.

 

தமிழ்த்தேசிய விடுதலைக்காக ஒரு தொடர்கூட்டியக்கம்
(ஒருங்கிணைப்பிற்கு மட்டும் * 93615 – 45000)

இந்தி – இந்து – இந்தியஆதிக்கத்தில்இருந்து

அம்பேத்கரிய – பெரியாரிய – மார்க்சிய கொள்கை வழியில்

வர்ண – வர்க்க – பாலின வேறுபாடுகளை ஒழித்து

தமிழ் – தமிழர் – தமிழ்நாடு விடுதலை பெற…

தமிழ்நாட்டின் நடுவிலுள்ள திருச்சிராப்பள்ளியை தலைமையகமாக கொண்டு மக்கள் நாயக முறைப்படி ஒரு மனதாகவும் / தவிர்க்க இயலாத சூழலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடனும் இயங்கும் ஒரு தொடர் கூட்டியக்கத்தை (தேர்தல் கட்சிகளை தவிர) 5 ஆண்டுகளுக்குள் கட்டமைக்கவும், கூட்டியக்கத்தின் தோழர்களைக் கொண்டு விடுதலை பெறவுள்ள தமிழ்நாட்டிற்கான ஒரு வரைவு அரசமைப்புச் சட்டம் வரையவும் – ஒரு மாதிரி திட்டம்.

தமிழ்நாட்டின் 234 சட்டமன்ற தொகுதிகளை 234 வட்டங்களாகவும், புதுவையிலுள்ள 30 சட்டமன்ற தொகுதிகளை 6 வட்டங்களாகவும் கொண்டு மொத்தம் 240 வட்டங்களுக்கும் மேற்கண்ட கொள்கையில் பிடிப்புள்ள 240 தோழர்களை (தனிஆட்களாகவும், பல்வேறு தமிழ்த் தேசிய இயக்கங்களிலிருந்தும்) அடையாளம் கண்டு வட்டவாரியாக கூட்டியக்கத்தில்சேர்ப்பது.

அவ்வாறு இனங்காணப்படும் தோழர்கள் 60 வயதிற்கு உட்பட்டவர்களாகவும், அவர் தம் வட்டத்தில், மேற்கண்ட கொள்கையில் பிடிப்புள்ள அனைத்துத் தோழர்களையும் சேர்த்து மாதம் ஒரு நாள் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கக் கூடியவர்களாகவும், அதற்காக தன்னுடைய வருமானத்தில் 10% தொகை (குறைந்தது மாதம் ரூ.1000/-) செலவிடக் கூடியவர்களாகவும்இருப்பவர்களாக உறுதிப்படுத்திக்கொள்வது.

தமிழ்நாடு மற்றும் புதுவையிலுள்ள 60 வயதிற்கும் மேற்பட்ட மேற்கண்ட கொள்கையை முழுமையாக ஏற்றுக் கொண்ட மூத்த தோழர்களைக் கொண்டு அவர்களில் ஒருவரின் ஒருங்கிணைப்பில் ஒரு அரசியல்அறிவுரைக்குழு அமைத்து கொள்வது.

240 வட்ட ஒருங்கிணைப்பாளர்களில் 6 வட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஒன்று சேர்ந்து தங்களுக்குள்ஒருவரை ஒரு நாடாளுமன்ற தொகுதியை ஒரு மாவட்டமாக கொண்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளராகத் தேர்வு செய்து மொத்தம்40 மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களைத்தேர்ந்தெடுப்பது.

40 மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களில் 10 மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஒன்றுசேர்ந்து தங்களுக்குள் ஒருவரை தமிழ்நாட்டை கிழக்கு, மேற்கு, வடக்கு & தெற்கு என 4 மண்டலமாக கொண்டு 4 மண்டலங்களுக்கும் மொத்தம் 4 மண்டல ஒருங்கிணைப்பாளர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் கூட்டுத் தலைமையின் கீழ்செயல்படுவது.

4 மண்டல ஒருங்கிணைப்பாளர்களைக் கொண்ட குழு குறைந்தது மாதம் ஒரு முறை கூட வேண்டும். 40 மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களைக் கொண்ட குழு குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூட வேண்டும். 240 வட்ட ஒருங்கிணைப்பாளர்களைக் கொண்ட குழு குறைந்தது ஆண்டிற்கு ஒரு முறை கூட வேண்டும். மேற்கண்ட அனைத்தும் திருச்சிராப்பள்ளியில் சனி மற்றும் ஞாயிறுகளில் கூட வேண்டும்.

இந்தக் கூட்டியக்கத்தில் இருக்கும் தோழர்கள் மேற்கண்ட கொள்கை கொண்ட எந்தக் இயக்கத்தை சேர்ந்தவராகவும் இருக்கலாம். அந்த இயக்கம் மேற்கண்ட கொள்கை கொண்ட எந்தக் கூட்டமைப்பிலும் அங்கம் வகிக்கலாம். இந்த கூட்டியக்கத்தின் வட்ட ஒருங்கிணைப்பாளராக இருக்கும் தோழரின் கொள்கைவழி செயல்பாடுகளே முக்கியமானது.

ஏனெனில், நாம் நீலச்சட்டை போட்டுக் கொண்டு அம்பேத்காரியல், கருப்புச்சட்டை போட்டுக் கொண்டு பெரியாரியல், சிவப்புச்சட்டை போட்டுக் கொண்டு மார்க்சியல் பேசுபவர்கள் கொள்கைப்படி தங்கள் வாழ்க்கையில் தமிழ், தமிழர், தமிழ்நாடு விடுதலைக்காக உழைக்கவும், பொருட்செலவு செய்யவும் கடமைப்பட்டவர்கள். ஆனால் கொள்கை பேசுகிறோம் என்று ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டு தமிழ், தமிழர், தமிழ்நாடு விடுதலைக்கு பாடுபடாமல் பொழுதைக் கழிக்கிறோம்.

ஆகவே, நம் மீது ஆதிக்கம் செலுத்தும் இந்(தி)(து)ய தேசியத்தை தான் நாம் எதிர்க்க வேண்டும். அதற்காக தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு இந்திய தேசிய கட்சிகளுக்கு வாக்களிக்கும் சுமார் 9% இந்தியரை நாம் அனைவரும் சேர்ந்து “தமிழராக” மாற்ற வேண்டும். அவர்களுக்கு தமிழ், தமிழர், தமிழ்நாடு விடுதலை பெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த வேண்டும்.